Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | பிரெஞ்சுக்காரர்

ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் - பிரெஞ்சுக்காரர் | 11th History : Chapter 16 : The Coming of the Europeans

11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை

பிரெஞ்சுக்காரர்

இந்தியாவுடன் வணிக உறவை மேற்கொள்ள பிரெஞ்சுக்காரர் 1527ஆம் ஆண்டிலேயே முயற்சி மேற்கொண்டனர்.

பிரெஞ்சுக்காரர்

இந்தியாவுடன் வணிக உறவை மேற்கொள்ள பிரெஞ்சுக்காரர் 1527ஆம் ஆண்டிலேயே முயற்சி மேற்கொண்டனர். போர்த்துகீசியராலும் டச்சுக்காரராலும் தூண்டப்பட்ட பிரெஞ்சுக்காரர் 1664இல் உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் தங்கள் வணிகச் செயல்பாடுகளைத் தொடங்கினர். ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வணிக நிறுவனங்கள் தனியார் வணிக நிறுவனங்களாக இருக்க, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசர் பதினான்காம் லூயியின் திட்டமாக அமைந்தது. அவருடைய நிதியமைச்சரான கோல்பெர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்படுவதற்கு காரணமாக இருந்தார்.

பிரான்சின் முயற்சியானது அரசால் தொடங்கப்பட்ட முயற்சியாக இருந்ததால் பொதுமக்களின் ஆர்வத்தை அது ஈர்க்கத் தவறியது. மேலும் வரிவிதிப்பதற்கான மற்றொரு வழியென்றே அதை மக்கள் கருதினர்.

மடகாஸ்கர் வழியாகப் புதுச்சேரி

1602இல் பிரெஞ்சு வணிகர்கள் ஆப்ரிக்காவிலுள்ள மடகாஸ்கரை அடைந்தனர். மடகாஸ்கரைத் தங்களின் காலனியாதிக்கப் பகுதியாக கொண்டிருந்தாலும், 1674 இல் கடற்கரையோரமுள்ள ஒரு சிறு வணிகமுகாமைத் தவிர ஏனைய இடங்களைக் கைவிட நேர்ந்தது. இந்தியாவிலிருந்த பிரெஞ்சு முகவரான பெர்பர், செப்டம்பர் 4, 1666இல் முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப்பிடமிருந்து அனுமதி ஆணை பெற்று தங்களின் முதல் நிறுவனத்தை டிசம்பர் 1668இல் டச்சுக்காரரின் எதிர்ப்பையும் மீறி சூரத்தில் அமைத்தார். ஓராண்டிற்குள் மசூலிப்பட்டினத்தில் மற்றுமொரு நிறுவனமும் அமைக்கப்பட்டது.

இக்காலத்தில் நிறுவனம் (factory) என்பது அயல்நாடுகளிலுள்ள தங்கள் முதலாளிகளுக்காக வணிக முகவர்கள் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடம் என்னும் பொருளைப் பெற்றது.

இந்தியாவில் காலூன்ற வலுவான இடம் தேவை என்பதை உணர்ந்த நிதியமைச்சர் கோல்பெர்ட், ஹேய் (ஜேக்கப் பிளான் குயிட் டி லா ஹேய், Jacob Blanquet de la Haye) என்பாரின் தலைமையில் கப்பற்படையொன்றை அனுப்பி வைத்தார். சாந்தோமிலிருந்தும் மயிலாப்பூரிலிருந்தும் டச்சுக்காரரை வெளியேற்றுவதில் பிரெஞ்சுக்காரர் 1672இல் வெற்றி பெற்றனர். டச்சுக்காரர்களுக்கு எதிராகப் பீஜப்பூர் சுல்தானின் பிரதிநிதியான உள்ளூர் ஆளுநர் செர்கான் லோடியின் உதவியை பிரெஞ்சுக்காரர் நாடினர். பீஜப்பூரின் எதிரியான கோல்கொண்டா சுல்தானோடு, டச்சுக்காரர் நட்பு கொண்டனர். பிரெஞ்சுக்காரர் குடியேறுவதற்குப் பொருத்தமான இடமென புதுச்சேரியை செர்கான் லோடி வழங்கினார். 1673இல் புதுச்சேரி ஒரு சிறிய மீனவக் கிராமமாக இருந்தது. மடகாஸ்கரில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சூரத் வந்த பிரான்சிஸ்மார்ட்டின் என்பவர் புதுச்சேரியின் ஆளுநர் ஆனார். இந்தியாவில் பிரெஞ்சுக் குடியேற்றங்களின் அதிகார மையமாக அதை உருவாக்கினார்.

டச்சுக்காரருடன் போட்டியும் போர்களும்

புதுச்சேரியைத் தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரெஞ்சுக்காரர் மிகவும் சிரமப்பட்டனர். தங்களின் முக்கியப் போட்டியாளரான டச்சுக்காரர்களை முதலில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிரான்சும் ஹாலந்தும் 1672இலிருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்குப் போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் அவை வங்காளத்திலிருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஆகவே 1693இல் புதுச்சேரியை டச்சுக்காரர் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 1697இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுகாரருக்குத் தரப்பட்டது. இருந்தபோதிலும் 1699இல்தான் அது பிரெஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது. 1706இல் பிரான்ஸிஸ் மார்ட்டின் இயற்கை எய்தும்வரை அதன் ஆளுநராக இருந்தார்.

நாங்கள் கடந்து சென்ற கிராமப்புறப்பகுதி (புதுச்சேரிக்கு வெளியேயுள்ள பகுதி) மிக நன்றாக விவசாயம் செய்யப்பட்டிருந்தது. மிக அழகாகவும் இருந்தது. அரிசி ஏராளமாகக் காணப்பட்டது. எங்கே நீர் இருந்ததோ அங்கே பருத்தி விளைவிக்கப்பட்டது.” புதுச்சேரி நிலப்பரப்பை குறித்து பிரான்ஸிஸ் மார்ட்டின் தனது நாட்குறிப்பில் எழுதியது.

பிரெஞ்சுக்காரர் மேற்கொண்ட பெருமுயற்சியின் விளைவாக 1725இல் மாகியையும் 1739இல் காரைக்காலையும் பெற்றனர். வங்காளப் பகுதியில் காசிம் பஜார், சந்தன்நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவுபடுத்துவதில் பிரெஞ்சுக்காரர் வெற்றி பெற்றனர். பியரி பெனாய்ட் டூமாஸ் என்பவர் (1668-1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார். இருந்தபோதிலும் தங்களைவிட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்துதல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. இறுதியில் தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர்.

பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கை புதுச்சேரி, மாகி, காரைக்கால், சந்திரநாகூர் ஆகிய இடங்களில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.

Tags : Arrival of Europeans and the Aftermath ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும்.
11th History : Chapter 16 : The Coming of the Europeans : The French Arrival of Europeans and the Aftermath in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை : பிரெஞ்சுக்காரர் - ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பின்பும் : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 16 : ஐரோப்பியரின் வருகை