Home | 11 ஆம் வகுப்பு | 11வது வரலாறு | குப்தப் பேரரசின் வீழ்ச்சி

வரலாறு - குப்தப் பேரரசின் வீழ்ச்சி | 11th History : Chapter 7 : The Guptas

11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்

குப்தப் பேரரசின் வீழ்ச்சி

குப்த வம்சத்தின் கடைசி அரசராக அறியப்படுபவர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.ஆ. 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார்.

குப்தப் பேரரசின் வீழ்ச்சி

குப்த வம்சத்தின் கடைசி அரசராக அறியப்படுபவர் விஷ்ணுகுப்தர். இவர் பொ.. 540 முதல் 550 வரை ஆட்சி செய்தார். உள்நாட்டுப் பூசல்களும், அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயின. புத்தகுப்தர் என்ற குப்த அரசர் ஆட்சிக்காலத்தில் மேற்கு தக்காணத்தின் வாகடக்க அரசரான நரேந்திரசேனா மால்வா, மேகலா மற்றும் கோசலா மீது படையெடுத்தார். பின்னர் மற்றொரு வாகடக அரசரான ஹரிசேனர் மாளவத்தையும் குஜராத்தையும் குப்தர்களிடமிருந்து கைப்பற்றினார். இரண்டாம் சந்திரகுப்தரின் பேரனான ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின் போது ஹுணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள். ஸ்கந்தகுப்தர் ஹுணர்களை விரட்டுவதில் வெற்றி பெற்றாலும், அதன் விளைவுகள் பேரரசின் நிதி நிலையை நலிவுறச் செய்தது. ஆறாம் நூற்றாண்டில், ஹுணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றைக் கைப்பற்றினர். ஹுணர் படையெடுப்பால், நாட்டின் மீது குப்தர்களின் பிடி தளர்ந்தது. மாளவத்தின் யசோதர்மன், உத்திரபிரதேசத்தின் முகாரிகள், சௌராஷ்டிரத்தின் மைத்ரகாக்கள் போன்று பல சிற்றரசர்கள் உருவாக ஆரம்பித்தனர். குப்தப் பேரரசு பெருமளவு சுருங்கி மகதத்தில் மட்டும்தான் இருந்தது. பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்ததும் இவர்கள் பேரரசை விரிவுபடுத்துவதிலோ, ராணுவப் படையெடுப்புகளிலோ கவனம் செலுத்தாததும் பேரரசைப் பலவீனப்படுத்தியது. அத்துடன், வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பேரரசு சிதைந்து பிராந்தியத் தலைவர்களால் ஆளப்பட்ட சிறுசிறு பகுதிகளானது.

நிலப்பிரபுத்துவம்: நிலப்பிரபுத்துவம் என்ற சமூக அமைப்பு இந்தியாவின் மத்தியகால சமூகத்தின் ஒரு பண்புநிலை ஆகும். வரலாற்றாளர் ஆர்.எஸ். சர்மா பின்வரும் நிலப்பிரபுத்துவ பண்புகளைப் பட்டியலிடுகிறார்: அரசர் அளிக்கும் நில மானியம், நிதி, நீதி உரிமைகளை பயனாளிகளுக்கு மாற்றித்தருதல்; விவசாயிகள், கலைஞர்கள், வணிகர்கள் மீது நில உடைமையாளர்களுக்கு உரிமை அளித்தல்; அடிக்கடி நிகழ்ந்த கட்டாய உழைப்பு நிகழ்ச்சிகள்; உபரியை அரசு எடுத்துக்கொள்ளல்; வணிகத்திலும், நாணயம் அச்சடித்தலிலும் வீழ்ச்சி; அதிகாரிகளின் ஊதியத்தை நில வருவாய் வசூல் மூலம் பெற்றுக்கொள்ள அனுமதிப்பது; சமந்தர்கள் (நிலப்பிரபுத்துவ துணைநிலை ஆட்சியாளர்கள்) அதிகாரங்கள் அதிகரித்தல்.

Tags : History வரலாறு.
11th History : Chapter 7 : The Guptas : Decline of the Gupta Empire History in Tamil : 11th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர் : குப்தப் பேரரசின் வீழ்ச்சி - வரலாறு : 11 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வகுப்பு வரலாறு : அலகு 7 : குப்தர்